கோர்ட்டு உத்தரவின்பேரில் புதுவையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் பொதுப்பணித்துறை அதிரடி

கோர்ட்டு உத்தரவின்பேரில் புதுவை லாஸ்பேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.;

Update:2022-02-15 18:53 IST
புதுச்சேரி
கோர்ட்டு உத்தரவின்பேரில்  புதுவை லாஸ்பேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

சாலைகள் ஆக்கிரமிப்பு

புதுவையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலுக்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பதைவிட சாலைகளின் ஆக்கிரமிப்புதான் மிக முக்கிய காரணமாக உள்ளது. வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வீதிகளில் கூட சாலைகள் ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளது. 

கோர்ட்டு உத்தரவு

அந்த வகையில் லாஸ்பேட்டை கல்லூரி சாலை, கொட்டுப்பாளையம் பகுதிகளில் கடைகள், வீடுகள், வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு பெரும்பாலான இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து படிக்கட்டுகள், மேற்கூரைகள், விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. லாஸ்பேட்டை பகுதியில் நீதிபதிகள் குடியிருப்பும் உள்ளது.
ஆக்கிரமிப்புகளால் அங்கிருந்து புதுவை கோர்ட்டுக்கு வரும் நீதிபதிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும் அடிக்கடி புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ஒருவாரத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுப்பணி துறைக்கு புதுவை கோர்ட்டு உத்தரவிட்டது.

போலீஸ் குவிப்பு

அதன்படி  இன்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேல்முருகன் தலைமையில் 2 டிராக்டர்களில் அங்கு வந்து இறங்கிய பணியாளர்கள் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதாவது, பொக்லைன் எந்திரம் மூலம் கொட்டுப்பாளையம் விநாயகர் கோவில் தெரு, கல்லூரி சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டப்பட்டிருந்த கூரைகள், விளம்பர பதாகைகள், படிக்கட்டுகள் உள்ளிட்டவை இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இதில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோர்ட்டு உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்