2024 ல் நாடாளுமன்ற தேர்தலின் போது சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் - ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
கொடுக்கிறவர்கள் அ.தி.க.மு.வினர்.எடுக்கின்றபவர்கள் தி.மு.க.வினர்.சட்டமன்ற தேர்தலின்போது 505 பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க.வினர் வழங்கினர் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
திருச்சி,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 -ந் தேதி நடக்கிறது. இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக இன்று காலை திருச்சி மன்னார்புரத்தில் உள்ள வி.எஸ்.முகமது இப்ராகிம் மண்டபத்திற்கு வந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் அதிக முறை ஆட்சி புரிந்தது கிடையாது. ஏனென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார்கள்.
ஜெயலலிதா கண்ட கனவுகளையும், திட்டங்களையும், அதன்பிறகு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சி நடந்தது. அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளோம்.
2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று 3-வது முறை ஆட்சி புரியும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதுபற்றி கேட்டால் நாங்கள் எப்படியாவது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தேர்வு ரத்து தான் எனது முதல் கையெழுத்து என்று கூறினார். அது நடந்ததா? இல்லை.
கொடுக்கிறவர்கள் அ.தி.க.மு.வினர்.எடுக்கின்றபவர்கள் தி.மு.க.வினர்.சட்டமன்ற தேர்தலின்போது 505 பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க.வினர் வழங்கினர். ஏதாவது உருப்படியாக செய்தார்களா?. இவர்களது ஆட்சி காட்சியாக தான் உள்ளது.
தி.மு.க.வினருக்கு நல்ல பாடம் சொல்லும் ஒரு தேர்தலாக இந்த தேர்தல் உள்ளது. எங்களை பொறுத்த வரை எம்.ஜி.ஆர். அவர்களின் சாதனைகள் மற்றும் ஜெயலலிதாவின் சாதனைகள் எல்லாம் தாண்டி தொண்டர்களை முன் நிறுத்தி தான் வாக்குகளை கேட்போம்.
இந்தியாவில் எத்தனையோ அரசியல் கட்சிகள் உள்ளது. ஆனால் தொண்டர்களால் கட்டிக் காக்கப்படும் கட்சி என்றால் அது அ.தி.மு.க. தான்.
இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழக சட்ட மன்றத்திற்கும் உறுதியாக தேர்தல் வரும்.
அ.தி.மு.க.வுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. எனவே அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி நமது வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100 சதவீதம் வெற்றி உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.