சபாநாயகர் செல்வம் தலைமையில் சட்டசபைக்கு தன்னாட்சி அதிகாரம் குறித்து ஆலோசனை
புதுவை சட்டசபைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் சபாநாயகர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி
புதுவை சட்டசபைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் சபாநாயகர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டம்
புதுவை மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சரிவர ஒத்துழைப்பதில்லை. அரசு அதிகாரிகள் சரிவர வேலை செய்யாமல் உள்ளனர். சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு சபாநாயகர் செல்வம் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் சட்டசபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நிர்வாகம் மற்றும் நிதி தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தலைமை செயலர் அஸ்வனிகுமார், அரசு செயலர்கள் பிரசாந்த் கோயல் (நிதி), கார்த்திகேயன் (சட்டம்), ஸ்மித்தா (பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை) முனுசாமி (சட்டசபை), சார்பு செயலர்கள் ஜெய்சங்கர், கண்ணன், சட்டசபை தலைவரின் தனி செயலர் தயாளன், கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குனர் பிரபாவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சட்டசபைக்கு அதிகாரம்
கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், நாடாளுமன்றம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ளது போல் சட்டசபைக்கு நிர்வாகம் மற்றும் நிதி தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று தலைமை செயலர், அரசு செயலர்களுக்கு எடுத்து கூறினார்.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற அரசு அதிகாரியை ஆலோசகராக நியமித்து அல்லது ஒரு குழு அமைத்து புதுச்சேரி சட்டசபைக்கான அதிகாரங்கள் என்னென்ன வரையறுக்கப்படலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. சபாநாயகர் கூறியதுபோல், தன்னாட்சி பெற்ற செயலகமாக சட்டசபை செயலகம் செயல்படுவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்து முடிவு எடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.