தொழில் முதலீடுகளுக்கு மிகச்சிறந்த மாநிலம் தமிழ்நாடு - ஆய்வில் தகவல்

தமிழ்நாடு தொழில் முதலீடுகளுக்கு மிகச்சிறந்த மாநிலமாக உருவெடுத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Update: 2022-01-18 01:22 GMT
சென்னை, 

2021 ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தொழில் முதலீடுகளை அதிகமாக பெற்றுள்ள மாநிலம் தமிழகமாகும். 304 திட்டங்களின் மூலம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 902 கோடியை தமிழகம் மூலதனமாக பெற்றுள்ளது. 2022 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் அதிகமான தொழில் முதலீடுகளை பெற்றுள்ள மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் தமிழ்நாடு ரூ.36 ஆயிரத்து 292 கோடியை மட்டுமே தொழில் மூலதனமாக பெற்றிருந்தது.

தமிழ்நாட்டுக்கு இந்த நிதியாண்டில் கிடைத்திருக்கும் ஒட்டு மொத்த முதலீட்டு ஆதாயம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 610 கோடியாகும். ரூ.77 ஆயிரத்து 892 கோடி தொழில் மூலதனத்துடன் குஜராத் மாநிலம் 2-வது இடத்திலும், ரூ.65 ஆயிரத்து 288 கோடி தொழில் மூலதனத்துடன் தெலுங்கானா மாநிலம் 3-வது இடத்திலும் இருக்கின்றன என ‘புராஜெக்ட் டுடே' நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ள சில நிறுவனங்களில் ‘டாடா' குழுமம், ‘ஜே.எஸ்.டபிள்யூ. ரீனியூ', ‘ஹிந்துஸ்தான் யுனிலீவர்', ‘டி.வி.எஸ்.' மோட்டார், ‘அதானி' குழுமம், 'லார்சன் அண்ட் டூப்ரோ' ஆகியவை அடங்கும்.

தமிழ்நாடு அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்திருப்பதற்கு அதன் சிறப்பான கொள்கைகளும், பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்கும் அணுகுமுறையுமே காரணங்களாகும்.

இதுகுறித்து தொழில்துறையின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், ‘‘எங்களது பிரச்சினைகளை பற்றி கேட்பதற்கும், அவற்றை தீர்த்து வைப்பதற்குமான விருப்பம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதே நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்திருக்கும் கருத்தாகும். முடிவுகள் விரைவாக எடுக்கப்படுகின்றன.

ஊக்கத்தொகுப்புகள் உடனடியாக கிடைக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவை முக்கியமான தேவைகளாக இருக்கின்றன. பொருளாதார பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு விரைந்து முடிவெடுப்பது மிக முக்கியமானதாக இருக்கிறது’’ என்றார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்