முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோர்ட்டில் ஆஜர்...!

ஸ்ரீவில்லிப்புத்தூர் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி முன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2022-01-06 02:34 GMT
விருதுநகர்,

அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து. ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 17-ந் தேதி முதல் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர். 

இதனையடுத்து, ராஜேந்திர பாலாஜியை  தனிப்படை போலீசார் கர்நாடகவில் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பின்னர், விசாரணைக்காக ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டார். அவரிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விடிய விடிய பல மணி நேரம் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜி மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தற்போது ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு நீதிபதி பரம்வீர் முன் ராஜேந்திரபாலாஜி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென கோர்ட்டில் போலீசார் தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்