திருவொற்றியூரில் வீடு இழந்தவர்களுக்கு அருகிலேயே வீடு ஒதுக்கீடு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருவொற்றியூரில் வீடு இழந்தவர்களுக்கு அருகிலேயே வீடு ஒதுக்கீடு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.;

Update:2021-12-29 00:23 IST
சென்னை,

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவொற்றியூர் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததால் அதில் குடியிருந்த 24 குடும்பங்கள் தங்களின் அனைத்து உடமைகளையும் இழந்து வீதிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு தற்காலிக தங்குமிடமும், ரூ.1 லட்சம் நிதியும் அரசு வழங்கியிருப்பது நல்ல நடவடிக்கை.

பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் தங்களுக்கு வேறு இடத்தில் வீடு ஒதுக்கப்படலாம் என்று அஞ்சுகின்றனர். அவ்வாறு ஒதுக்கப்பட்டால் அவர்கள் திருவொற்றியூர் பகுதியில் கிடைக்கும் வாழ்வாதாரங்கள், கல்வி வாய்ப்புகளை இழக்க நேரிடும். இது அவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

திருவொற்றியூரில் இடிந்த வீடுகளில் வாழ்ந்தவர்களுக்கும், அச்சம் காரணமாக அருகிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறியவர்களுக்கும் திருவொற்றியூர் பகுதியிலேயே உடனடியாக வீடுகளை ஒதுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவொற்றியூரில் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்க இயலவில்லை என்றால், இடிந்த வீடுகளை குறிப்பிட்ட காலத்தில் புதிதாக கட்டி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை அவர்களுக்கு மாத வாடகையாக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்