சுடுகாட்டிலிருந்து தாயின் உடலை தோண்டியெடுத்து வீட்டில் வைத்திருந்த மகன்
சுடுகாட்டில் வைத்திருந்த தாயின் உடலை மகன் தோண்டியெடுத்து வீட்டில் வைத்திருந்தார்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி மூக்காயி. மகன் பாலமுருகன் (வயது 38). வேலு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து பாலமுருகன், தனது தாய் மூக்காயியுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மூக்காயியும் இறந்து விட்டார்.
இதைத்தொடர்ந்து மூக்காயி உடல் ஊர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.
தாய், தந்தை இருவரும் இறந்துவிட்ட நிலையில் பாலமுருகன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். மேலும் பாலமுருகன் கடந்த 6 மாதங்களாக மூக்காயி புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அங்கு உட்கார்ந்து தனக்குத்தானே பேசி வந்துள்ளார். மேலும் மூக்காயி புதைக்கப்பட்ட இடத்தில் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை தோண்டி அருகில் தள்ளியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மூக்காயி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அவரது உடலை வெளியே எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் அழுகிய நிலையில் உள்ள மூக்காயி உடலை பாலமுருகன் தோளில் சுமந்து வந்துள்ளார். பின்னர் மூக்காயி உடலை ஊராட்சியின் குப்பை வண்டியில் வைத்து வீட்டிற்கு கொண்டு வந்து பத்திரப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் பாலமுருகனின் உறவினரான சுமதி நேற்று இரவு 8 மணி அளவில் அவருக்கு சாப்பாடு கொடுக்க வந்தார். அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது மூக்காயியின் உடல் அழுகிய நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மூக்காயியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் அடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.
புதைக்கப்பட்ட தாயின் உடலை மகன் தோண்டியெடுத்து வீட்டிற்கு கொண்டு வந்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.