முறையாக கணக்கு தாக்கல் செய்யாததால்: செல்போன் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

செல்போன் நிறுவனம் தொடர்புடைய 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-21 23:10 GMT
சென்னை,

‘ஓப்போ’ செல்போன் நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. அதனடிப்படையில், சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள அந்த செல்போன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் இந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள இந்த நிறுவன அலுவலகங்கள் மற்றும் அனைத்து நகரங்களிலும் சோதனை நேற்று நடந்தது. அந்த வகையில் சென்னை, காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள செல்போன் போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ‘பாக்ஸ்கான்’ தொழிற்சாலை உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

ஆவணங்கள் ஆய்வு

இதுகுறித்து சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

செல்போன் நிறுவனம் முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்ற புகார் வந்தது. அதன் அடிப்படையில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம் உள்பட பல்வேறு நகரங்களில் இந்த சோதனை நடக்கிறது.

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதால் சோதனை தொடர்ந்து நடைபெறும். அதற்கு பிறகே பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் ஆவணங்களின் மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்