ஜவுளி மீதான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் மத்திய மந்திரிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

ஜவுளி மீதான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.;

Update:2021-12-22 03:11 IST
சென்னை,

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தின் ஜவுளித்துறை நாட்டின் பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்க அளவிலான பங்களிப்புகளை அளித்து வருகிறது. ஏற்றுமதியை தவிர அன்னிய செலவாணி மூலம் கணிசமான வருவாயை மத்திய-மாநில அரசுகள் ஈட்டுவதையும் உறுதி செய்கிறது. தொழில் வளர்ச்சிக்கும், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்கி முன்னோடியாகவும் திகழ்கிறது.

கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளில் பருத்தி நூலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பல்வேறு சவால்களுடன், கடும் நெருக்கடியான சூழலை தொழிற்சாலைகள் சந்தித்து வருகின்றன.

பாதிப்பு ஏற்படுத்தும்

இந்தநிலையில் பல்வேறு ஜவுளி மற்றும் ஜவுளி உற்பத்தி பொருட்களுக்கான வரியை அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி முதல் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவதற்கு சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஜவுளி மற்றும் துணி உற்பத்தி அலகுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் லட்சக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். இதுதவிர ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தும் முடிவு, நுகர்வோர்களின் விலையை உயர்த்துவதோடு, பணவீக்கத்தையும் அதிகரிக்கும். இதனால், தமிழக விசைத்தறிகள் சங்கத்தின் சம்மேளனம் முன்பு இருந்தது போன்று அதாவது 5 சதவீத வரியையே வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

5 சதவீதம் ஆக குறைக்கவேண்டும்

எனவே, இந்த விவகாரத்தை நிதி அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, ஜவுளி உற்பத்தி பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை கடுமையாக்குங்கள்

இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் குறைந்துகொண்டே வருவது ஆறுதலை அளித்தாலும், மறுபுறம் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று இல்லை என்ற நிலையில் இருந்து, ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு, சிலருக்கு அதற்கான அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாக வருகிற செய்திகள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்