கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “ இன்று முதல் 3 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழையும் வட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.