மேற்கூரையை பிரித்து குதித்து ஓட்டலில் திருட்டு
காரைக்காலில் மேற்கூரையை பிரித்து ஓட்டலுக்குள் குதித்து திருடியவரை புகார் தெரிவிக்கும் முன்பே பிடித்த போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.;
காரைக்காலில் மேற்கூரையை பிரித்து ஓட்டலுக்குள் குதித்து திருடியவரை புகார் தெரிவிக்கும் முன்பே பிடித்த போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.
ஓட்டலில் கைவரிசை
காரைக்கால்-திருநள்ளாறு சாலை பெரிய பள்ளிவாசல் அருகில் மருதமுத்து என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை வழக்கம்போல் ஓட்டலுக்கு வந்த அவர் கதவை திறந்து உள்ளே சென்றபோது, கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.4 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஓட்டலின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்து பணம், செல்போனை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புகார் கொடுப்பதற்காக மருதமுத்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
வாலிபர் பிடிபட்டார்
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திருநள்ளாறு சாலையில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.
விசாரணையில் அவர், காரைக்கால் வேட்டைக்காரன் வீதியில் வசித்து வரும் மகேந்திரன் (வயது 26) என்பதும், மருதமுத்துவின் ஓட்டலில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு மருதமுத்துவிடம் முறைப்படி புகாரை பெற்ற போலீசார், மகேந்திரனை கைது செய்தனர். புகார் கொடுப்பதற்கு முன்பாகவே, திருடனை பிடித்த போலீசாரை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.