தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
பள்ளிக்கு வராததை தலைமை ஆசிரியர் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிக்கு வராததை தலைமை ஆசிரியர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி
புதுச்சேரி பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி கோதை. இவர்களது 2-வது மகள் சுவேதா. (வயது 14). கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மீண்டும் அவர் பள்ளிக்கு சென்றார். பள்ளிக்கு முறையாக வருவது இல்லையா? என்று கூறி தலைமை ஆசிரியர் சுவேதாவை கண்டித்ததாக தெரிகிறது.
தற்கொலை
மேலும் பெற்றோருடன் வந்து சந்திக்குமாறு தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். அதன்பேரில் சுவேதா தனது சகோதரரை பள்ளிக்கு அழைத்து சென்று தலைமை ஆசிரியரை சந்தித்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த சுவேதா வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுவேதா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கியது தெரியவந்தது. உடனே அவர்கள் சுவேதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.