குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ அதிகாரிகளிடன் விபத்து குறித்து கேட்டறிந்த முதல்-அமைச்சர்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் விவரம் கேட்டறிந்தார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.
ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மிதுலிஹா மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கிய குரூப் கேப்டன் வருண் சிங் படுகாயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை குன்னூர் சென்றடைந்தார். வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்தும், விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்தும் ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.