காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சபாநாயகர் அமைச்சர் திடீர் ஆய்வு

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

Update: 2021-12-08 16:10 GMT
காரைக்கால்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

டாக்டர்கள் பற்றாக்குறை

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான மருந்துகள் கையிருப்பு இல்லை, டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்க முடியவில்லை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் புதுச்சேரி அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில் சபாநாயகர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோர்  காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியை நேரில் சென்று ஆய்வு செய்தனர். 
மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளை பார்வையிட்ட அவர்கள், மருத்துவமனையின் செயல்பாடு, மருந்துகள் இருப்பு உள்ளிட்டவை குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் குறைகள் குறித்து கேட்டனர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் 

அப்போது, மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள், கடந்த சில மாதமாக தங்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை என அமைச்சரிடம் முறையிட்டனர். அதற்கு அமைச்சர், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒப்பந்ததாரர்தான் ஊதியம் வழங்கவேண்டும் என்றார். 
உடனே நாஜிம் எம்.எல்.ஏ குறுக்கிட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு அரசுதான் ஊதியத்தொகையை வழங்கவேண்டும். இதுவரை ரூ.பல லட்சம் பாக்கி இருப்பதால், அவர்களால் ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது. இதை முதல்-அமைச்சரிடம் பேசி சரிசெய்யவேண்டும் என்றார். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சந்திரபிரியங்கா உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது சிவசங்கரன் எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் மதன்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்