விழுப்புரம் இரட்டை கொலை வழக்கு - இளைஞர் கைது

விழுப்புரம் இரட்டை கொலை வழக்கில் 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-08 03:47 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தாய், மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருவெண்ணைநல்லூரை சேர்ந்த கவிதாஸ் என்ற 30 வயது இளைஞரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கவிதாஸை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 

கவிதாஸ் வயதான பெண்களை மட்டும் குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்து நகை பறிப்பில் ஈடுபடுவதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மேலும் கவிதாஸிடம் இருந்து நகைகள், பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வழக்கின் விவரம்:-

விழுப்புரம் மாவட்டம் கலித்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி சரோஜா (வயது80). இவர்களது மகள் பூங்காவனம் (60).

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அம்மணங்குப்பத்தில் பூங்காவனம் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். இவரது கணவர் தங்கவேலு பிரிந்து சென்று விட்ட நிலையில் மகள் வள்ளியுடன் (29) பூங்காவனம் தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு கூலி வேலை செய்துபிழைப்பு நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு வள்ளி தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சரோஜாவும், பூங்காவனமும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் இவர்கள் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மஆசாமிகள் சரோஜா, பூங்காவனம் ஆகிய இருவரையும் கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலி, அரை பவுன் கம்மல் ஆகிய நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தாய், மகள் உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனிப்படை அமைத்து போலீசார் தாய், மகளை கொன்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.

மேலும் செய்திகள்