போக்சோ வழக்கில் கைதான கரூர் டாக்டருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
போக்சோ வழக்கில் கைதான கரூர் டாக்டர் ரஜினிகாந்திற்கு நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
கரூர்,
பாலியல் தொந்தரவு
கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள ஜி.சி. எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை டாக்டர் ரஜினிகாந்த் (வயது 55).
இவர் 17 வயதான பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதற்கு மேலாளர் சரவணன் (55) உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் கரூர் அனைத்து மகளிர் போலீசார் டாக்டர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு
பின்னர், கரூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட டாக்டர் ரஜினிகாந்த்திற்கு 15 நாள் காவலில் வைக்க நீதிபதி நசீமாபானு உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
15 நாள் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததால் கரூர் மகளிர் விரைவு கோர்ட்டில் டாக்டர் ரஜினிகாந்த் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி நசீமாபானு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.