கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நீடிக்கும் கனமழை..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தொடருவதால் இன்றும் (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நாகர்கோவில்,
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்து வருகின்றது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைகளில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டதால் கோதையாறு, வள்ளியாறு, பழையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு போன்றவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை மூழ்கிய நிலையில் வெள்ளம் பாய்கிறது.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணக்காலையில் இருந்து படந்தாலுமூடு செல்லும் அதங்கோடு சாலையில் வெள்ளம் புகுந்து குளம் ேபால் காட்சியளித்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் சிறுவர் நீச்சல்குளத்தையும், அதையொட்டி உள்ள கல் மண்டபத்தையும் மூழ்கடித்து பாய்கிறது.
நேற்று மாலை நிலவரப்படி 2 நாட்களில் குமரி மாவட்டத்தில் பெய்த மழைக்கு 58 வீடுகள் இடிந்தன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஈசாந்திமங்கலம் அருகே உள்ள நங்காண்டி கிராமத்தை வெள்ளம் சூழ்ந்ததால் இங்குள்ள 18 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர். இந்த பணிகளை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
தெள்ளாந்தி பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் ஈசாந்திமங்கலம், செண்பகராமன்புதூர், கட்டளைகுளம், சமத்துவபுரம் போன்ற பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. திருப்பதிசாரம், கடுக்கரை, ெதரிசனங்கோப்பு, மாதவலாயம் பகுதியில் விளைநிலங்களில் பல அடி உயரத்திற்கு மழை வெள்ளம் தேங்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தோவாளை தாலுகாவில் 8 இடங்களிலும், கல்குளம் தாலுகாவில் 2 இடங்களிலும் என மாவட்டம் முழுவதும் 17 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தம் 113 குடும்பங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 366 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் 180 பேர் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று மதியம் வெள்ளம் வடிந்ததும் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
செண்பகராமன்புதூர் அருகே உள்ள கட்டளை குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள ஓடையில் பாய்ந்தது. அதைத்தொடர்ந்து கட்டளை குளத்தில் மண் மூடைகள் போட்டு தண்ணீர் வெளியேறுவதை தடுக்கும் பணி நடந்தது.
இதே போல் பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காடு நாடான் குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. அந்த குளத்து தண்ணீர் நாவல்காடு, இறச்சகுளம் ஆகிய ஊர்களுக்குள் புகுந்தது. இதேபோல தோவாளை தாலுகாவில் நேற்று மேலும் 2 குளங்களில் உடைப்பு ஏற்பட்டது. மொத்தம் 4 குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
தேரேகால புதூர் நாஞ்சில் நகர் பகுதியிலும், திருப்பதி சாரம் பகுதியிலும் படகுகள் மூலம் வீடுகளில் புகுந்த வெள்ளத்தில் சிக்கித்தவித்த பொதுமக்கள் மீட்கப்பட்னர்.
மழையால் குளச்சல், சின்னமுட்டம், தேங்காப்பட்டணம் மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்லவில்லை. அதேபோல கன்னியாகுமரியிலும் கடல்சீற்றம் அதிகமாக இருந்தது. மழையால் ரப்பர், செங்கல்சூளை, கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாகர் கோவில் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் சாலையை தாண்டி பழையாற்று தண்ணீர் செல்வதால் வாகன போக்குவரத்து நிறுத்தப் பட்டது. இது நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் அஞ்சுகிராமம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. அந்த மழை இரவிலும் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. தற்போது 3-வது நாளாக இன்றும் கனமழை நீடிக்கிறது. ஏற்கனவே கன மழை பெய்து குமரி மாவட்டமே வெள்ளக் காடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தொடர் மழை காரணமாக இன்றும் (சனிக்கிழமை) குமரி மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி சுருளோடு பகுதியில் அதிகபட்சமாக 150 மில்லி மீட்டர் மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி- 106, சிற்றார் 1- 41.4, சிற்றார் 2- 38, களியல்- 54, கொட்டாரம்- 70.2, குழித்துறை- 48, மயிலாடி- 102.4, நாகர்கோவில்-68, பெருஞ்சாணி- 129.8, பேச்சிப்பாறை- 63.6, புத்தன் அணை- 128.6, தக்கலை- 50, குளச்சல்- 6.4, இரணியல்- 42, பாலமோர்- 73.2, மாம்பழத்துறையாறு- 115.4, ஆரல்வாய்மொழி- 53, கோழிப்போர்விளை- 67, அடையாமடை- 86.2, குருந்தன்கோடு- 36.8, முள்ளங்கினாவிளை- 42.6, ஆனைக்கிடங்கு- 111.4, முக்கடல் அணை- 81 என பதிவாகி இருந்தது.