காமராஜரின் பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாட்டம் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்

காமராஜரின் 119-வது பிறந்தநாள் விழா தமிழக அரசு சார்பில் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

Update: 2021-07-15 04:23 GMT
சென்னை, 

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி (இன்று) காலை 10 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார். இதில், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

காமராஜர், தமிழ்நாட்டில் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

வாய்மை, தூய்மை, நேர்மை தொண்டாற்றல் போன்றவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்ததால் ‘கர்ம வீரர்’ என்றும் ‘பெருந்தலைவர்’ என்றும் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் என்றும் காமராஜர் மக்களால் போற்றப்படுகிறார்.

காமராஜர் மறைவுக்கு பின் மத்திய அரசு அவருக்கு 1976-ம் ஆண்டில் ‘பாரத ரத்னா’ என்ற உயர்ந்த விருதை வழங்கி கவுரவித்தது. 1976 ஜூலை 15-ந் தேதி அவரது நினைவு அஞ்சல் தலையை சென்னை காலைவாணர் அரங்கத்தில் மத்திய அரசு வெளியிட்டது.

விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்பட்டு 20.8.1975 அன்று திறந்து வைக்கப்பட்டது.

சென்னை தியாகராயநகரில் காமராஜர் வாழ்ந்த இல்லம் 21.6.1978 அன்று நினைவு இல்லமாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும், விருதுநகரில் அவரது நூற்றாண்டு மணிமண்டபம் 1.3.2006 அன்றும், கன்னியாகுமரியில் அவரது மணிமண்டபம் 2.10.2000 அன்றும் திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்