அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் காலமானார்
அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் (வயது 90) உடல்நலக்குறைவால் காலமானார்.;
சென்னை,
தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூண்டி கி.அய்யாறு வாண்டையார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.
காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பிரமுகராக இருந்த பூண்டி கி.அய்யாறு வாண்டையார், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1984-ம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து காங்கிரஸில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இவர் 2001-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, சில நாட்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து 2006-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். மேலும் தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகளில் கவுரவப் பொறுப்பிலும் இருந்தவர்.
இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது உடல் இன்று தஞ்சாவூருக்குக் கொண்டுவரப்பட்டு பூண்டி கிராமத்தில் மாலையில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இவரது மனைவி ராஜலெட்சுமி 2013-ம் ஆண்டில் காலமானார். மகன் தனசேகர வாண்டையார், மகள் பொன்னம்மாள் உள்ளனர்.