வடசென்னையை கலக்கிய ரவுடி கல்வெட்டு ரவி ஆந்திராவில் கைது

வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி கல்வெட்டு ரவியை ஆந்திராவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-02-05 23:31 IST
சென்னை,

வடசென்னை பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் கல்வெட்டு ரவி. இவர் மீது சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கல்வெட்டு ரவி, போலீசாரின் பிடியில் சிக்காமல் பல காலமாக தப்பி வந்தார்.

இதையடுத்து போலீசார் தங்கள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி, கல்வெட்டு ரவியின் கூட்டாளிகள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் முக்கிய குற்றவாளியான கல்வெட்டு ரவி மட்டும் போலீசிடம் இருந்து தலைமறைவானார். 

இந்நிலையில் கல்வெட்டு ரவி ஆந்திராவில் நடக்கும் தனது மைத்துனர் திருமணத்திற்கு வர இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆந்திராவில் உள்ள சிரிசாலா பகுதிக்கு விரைந்த தனிப்படை போலீசார், அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர்.

தனது குடும்பத்தினருடன் திருமண விழாவிற்கு வந்த கல்வெட்டு ரவி, தனியார் ஓட்டலில் தங்கி இருந்த போது, அவரை நள்ளிரவில் போலீசார் துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்தனர். இதன் பிறகு ஆந்திராவில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட கல்வெட்டு ரவியை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இன்று கைது செய்யப்பட்டுள்ள கல்வெட்டு ரவி சமீபத்தில் பாஜகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்