அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
சென்னை,
கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பிற மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வையும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டது. பள்ளிகள் திறக்க தாமதமாவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் அரசுப் பள்ளிகளில் நடத்தப்படவில்லை. ஆனால் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளை நடத்தின. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் நிலையில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம்.
1 முதல் 9-ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடத்திட்டங்களும், 10,11, 12-ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீத பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதேசமயம் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.