5½ லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

11-ம் வகுப்பு படிக்கும் 5½ லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

Update: 2020-12-11 00:19 GMT
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் அனைவருக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் 2001-2002-ம் கல்வியாண்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.

பின்பு, 2005-2006-ம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் சைக்கிள்கள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.

இந்தத் திட்டம் தொடர்ந்து 2020-2021-ம் கல்வியாண்டிலும் செயல்படுத்துகிறது. இந்த ஆண்டு 2 லட்சத்து 38 ஆயிரத்து 456 மாணவர்கள், 3 லட்சத்து 6 ஆயிரத்து 710 மாணவியர் என மொத்தம் 5 லட்சத்து 45 ஆயிரத்து 166 மாணவ-மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தினை துவக்கிவைக்கும் அடையாளமாக, 9 மாணவர்களுக்கு சைக்கிள்கள்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வி.எம்.ராஜலட்சுமி, சீ.வளர்மதி, தலைமைச்செயலாளர் க.சண்முகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஒட்டெம் டாய், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தர மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், தேனி மாவட்டம், தேனி வட்டம், வீரபாண்டி கிராமத்தில் ரூ.265 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு காணொலிக்காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

புதிதாக அமையவுள்ள இக்கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமானது மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கான மருத்துவ சேவையை பூர்த்தி செய்யும். இக்கல்லூரி கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால், பால், இறைச்சி மற்றும் கால்நடை உற்பத்திப்பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கும் பெரும் வாய்ப்பாக அமையும்.

2020-2021-ம் கல்வியாண்டில் இக்கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 40 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். மேலும், இப்புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாகக் கட்டிடம், நவீன வகுப்பறைகளுடன் கூடிய 8 கல்வித் தொகுதி கட்டிடங்கள், மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான தனித்தனி விடுதிகள், உணவகம், கல்லூரி முதல்வருக்கான குடியிருப்பு, விடுதி கண்காணிப்பாளருக்கான குடியிருப்பு, விருந்தினர் இல்லம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

அத்துடன் இக்கல்லூரியில், நவீன ஆய்வக வசதிகளுடன் கூடிய பால் மற்றும் இறைச்சிகளை பதப்படுத்தும் தொழில்நுட்ப நிலையங்கள் உள்பட 15 துறைகள், கால்நடை உற்பத்தி தொழில் நுட்பங்களை விவரிப்பதற்காக கால்நடைப் பண்ணை வளாகம், கால்நடை சிகிச்சை சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவமனை வளாகம் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சி.பாலச்சந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்