“மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை” - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கயில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் வடியாமல் இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறியிருக்கிறார். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் உள்ள வேளாண் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை புறநகர் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவும், தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை என்றும், உதவிகளும் பொய் சேரவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.