வரும் 8 ஆம் தேதி விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய பாரத் பந்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Update: 2020-12-06 11:14 GMT
PTI Photo
புதுடெல்லி,

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

11-வது நாளாக தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை. 

இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வரும் 8-ம் தேதி விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.  இந்த முழு வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. 

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பவன் கேரா இந்த தகவலை தெரிவித்தார். பவன் கேரா கூறுகையில், “  விவசாயிகளின் பாரத் பந்திற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.  எங்கள் கட்சி அலுவலகங்களின் முன்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்”என்றார், 

விவசாயிகள் நடத்தும் பாரத் பந்திற்கு தமிழக விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், சமூகநல அமைப்புகள், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக எதிர்க்கட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன

தமிழக எதிர்க்கட்சிகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் நலனை பாதுகாக்க தமிழகத்தில் இருந்து கிளம்பும் ஆதரவுக்குரல், அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு எழுச்சி குரலாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற துணை நிற்கும் குரலாக இருக்கட்டும். அனைத்து தரப்பு மக்களும் அமோக ஆதரவு அளித்து ‛பாரத் பந்த்'தை வெற்றி பெற செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்