இரவு நேரப் பணி காவலர்களுக்கு இனிப்பு வழங்கிய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவு நேரப் பணியில் இருந்த காவலர்களுக்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இனிப்பு வழங்கிய வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சென்னை,
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான போலீசார் நேற்று இரவு முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னை தி-நகர், கோயம்பேடு பேருந்து நிலையம், செண்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இரவு நேரப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இனிப்புகளை வழங்கினார்.
அந்த பகுதிகளுக்கு நேரில் சென்ற அவர் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் இரவு நேரப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் நேரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.