வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க தேர்தல் ஆணையத்தின் வழிமுறையின்படி நடவடிக்கை - சத்யபிரத சாகு விளக்கம்

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிமுறையின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

Update: 2020-11-13 21:16 GMT
சென்னை, 

சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு பெயர்கள் நீக்கப்படுவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் நடவடிக்கைகளில், இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.பொதுவாக இடம் மாறுவது, இறப்பு மற்றும் இரட்டை பதிவுகள் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுகிறது.

கொரோனாவில் இறந்தாலும், பொதுவான மரணம் என்றாலும், விதிகளின்படி அதற்கான விண்ணப்ப படிவம் பெற்ற பிறகுதான் பெயர் நீக்கப்படுகிறது.

பெயர் நீக்கப்பட்டவர்களின் பட்டியல் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும். அரசியல் கட்சியினர் அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

கொரோனா பரவல் சூழ்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் (கலெக்டர்கள்) ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலை வருகிற 16-ந் தேதி காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவார்கள். இம்மாதம் 21 மற்றும் 22-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் டிசம்பர் 12, 13-ந் தேதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்