சென்னையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொலை: மருமகள் உறவினர் கூலிப்படையை ஏவி சுட்டுக்கொலை செய்தார்களா?

சென்னையில் நிதி நிறுவன அதிபர் குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மருமகளே கூலிப்படையை ஏவி கொலை செய்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-11-12 08:18 GMT
சென்னை

சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் தலில்சந்த் (வயது 74). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் வால்டாக்ஸ் ரோடு விநாயகம் மேஸ்திரி தெரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மனைவி புஷ்பா பாய்(70). இந்த தம்பதியருக்கு ஷீத்தல்(40)என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உண்டு.

மகன் ஷீத்தல் தந்தை தலில்சந்துடன் சேர்ந்து நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.

தலில்சந்தின் மகள் பிங்கி திருமணமாகி சென்னையில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் ஷீத்தலுக்கு திருமணமாகி ஜெபமாலா என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது ஜெபமாலா வெளியூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீட்டில் தலில்சந்த், மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகிய 3 பேரும் தனியாக வசித்து வந்தனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி இது.

இந்த நிலையில், நேற்று மாலை மகள் பிங்கி, வீட்டில் இருந்த தந்தை தலித்சந்த் வீட்டிற்கு போன் செய்துள்ளார். இதையடுத்து, வெகுநேரமாகியும் அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த பிங்கி நேராக வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர், திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தாய், தந்தை, சகோதரர் 3 பேரும் மெத்தையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைப்பார்த்து கதறி அழுத பிங்கி உடனே யானைகவுனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
 ச்ம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்கள் 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண்குமார், வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் முழுவதும் இரும்பு தடுப்பு அமைத்து போலீஸ் கண்காணிப்புக்குள் கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் பல வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன. அந்த கேமராக்களின் பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர்.

மோப்ப நாயை வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை பதிவுகளை பதிவு செய்தனர்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மருமகளே கணவர், மாமனார், மாமியாரை சுட்டுக் கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஷீத்தலின் மனைவி ஜெயமாலா மராட்டியத்தில் இருந்து நேற்று உறவினர்களுடன் சென்னை திரும்பிய நிலையில், அவரே இந்த கொலையில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். 

கொலை செய்யப்பட்ட ஷீத்தலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது மனைவி ஜெயமாலாவுக்கு சொத்தை பிரித்து கொடுப்பதில் பிரச்சினை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஜெயமாலாவின் சகோதரர்கள் இருவர் மற்றும் சகோதரி அவரது பெண் குழந்தைகள் எதிர்க்காலத்திற்காக ஜீவனாம்சமாக குறிப்பிட்ட அளவு பணமும், சொத்தும் கேட்டு வந்ததாக தெரிகிறது. 

இதற்காக கடந்த ஓராண்டில் புனேவில் இருந்து 10-க்கும் மேற்பட்ட முறை வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதை காரணம் காட்டி தலில் சந்த் தாமதம்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் ஜெயமாலா சகோதரர்கள் சென்னை வந்த போது தலில் சந்த் மற்றும் ஷீத்தல் உடன் கடும் தகராறில் ஈடுபட்டதுடன், எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர். 

இதனால் அவர்கள் தான் இந்த கொலையில் ஈடுப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். அவர்கள் நேரடியாக கொலையில் ஈடுப்பட்டார்களா? அல்லது கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்தார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.த்தனிப்படையினர் மராட்டிய மாநிலம் விரைந் துள்ளனர்.

மேலும் செய்திகள்