பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி: பிரதமர் மோடி, நிதீஷ்குமாருக்கு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வாழ்த்து

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு, பிரதமர் மோடிக்கும், நிதீஷ்குமாருக்கும் துணை ஒ.முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-11 10:32 GMT
சென்னை, 

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 3 கட்டங்களாக அண்மையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. பின்னிரவு நீடித்த வாக்கு எண்ணும் பணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

ஆர்ஜேடி கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19, சிபிஎம்-எம்எல் 12, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களை பெற்றன. மகா ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணியில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் 5, பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் வெற்றி பெற்றன. லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஓரிடத்தை கைப்பற்றியது.

பாஜக - ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டரில், “பீகார் சட்டமன்றத் தேர்தலில் 125 தொகுதிகளைப் பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை நிரூபித்து வென்றுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கும், நிதீஷ்குமாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்