போலீஸ் தடையை மீறி வேல் யாத்திரை: திருத்தணியில் யாத்திரை தொடங்கிய எல்.முருகன், எச்.ராஜா கைது

போலீஸ் தடையை மீறி வேல் யாத்திரை: திருத்தணியில் யாத்திரை தொடங்கிய எல்.முருகன், எச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்தனர்.

Update: 2020-11-06 11:43 GMT
சென்னை

தடையை மீறி வரும் பா.ஜனதாவினரை கைது செய்வதற்கு முழுவீச்சில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். இதற்காக மூன்று மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா சார்பில் நடத்தப்படும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தடையை மீறி இன்று காலை கோயம்பேட்டில் உள்ள பா.ஜனதா தலைவர் எல்.முருகன் வீட்டிலிருந்து பா.ஜனதா வேல் யாத்திரையானது தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது மதுரவாயல், பூந்தமல்லி வழியாக திருத்தணி செல்ல முடிவு செய்யப்பட்டதையடுத்து பூந்தமல்லி அடுத்த திருமழிசை கூட்டு சாலையில் தடையை மீறி வரும் பாஜகவினரை கைது செய்வதற்காக கூடுதல் கமிஷனர் அருண், இரண்டு இணை கமிஷனர்கள், மூன்று துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 500 க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை போலீஸ் மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீசின் எல்லையை பிரிக்கும் இந்த பகுதியில் இரண்டு மாவட்ட போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பாஜகவினர் வாகனங்கள் தடுத்து நிறுத்துகின்றனர். பாஜக கொடியுடன் வரும் வாகனங்களை மடக்கி அந்த வாகனங்களை திருப்பி அனுப்புகின்றனர். தற்போது திருமழிசை கூட்டு சாலையில் தடையை மீறி வரும் பாஜகவினரை கைது செய்வதற்கு முழுவீச்சில் போலீசார் தயார் இருந்தனர்

கோயம்பேடு, மதுரவாயல், வேலப்பன்சாவடி, பூவிருந்தவல்லி வழியாக வந்த வேல் யாத்திரையை பூவிருந்தவல்லி - திருமழிசை கூட்டுச் சாலையில் இரும்புத் தடுப்புகள் அமைத்து போலீஸார் தடுத்தனர்.

அங்கு போலீஸாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவில், தான் சாமி கும்பிடுவதற்கு மட்டுமே செல்வதாகக் கூறிய பாஜக தலைவர் முருகனை போலீஸார் அனுமதித்தனர். பாஜக தலைவர் முருகனோடு சேர்த்து 10 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதனைப் பின்தொடர்ந்து வந்த பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் அங்கேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் முருகனின் வேல் யாத்திரைக்கு சில வாகனங்களை மட்டும் அனுமதித்தது குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தன.
திருத்தணி அருகே 10க்கும் குறைவான வாகன அணிவகுப்புடன் முருகன் சென்றார். அங்கு அவருடன் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொண்டார். பின்னர் திருத்தணியில் சாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்குள் முருகன், அமைச்சர் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி, ஹெச்.ராஜா, அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோரை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

சாமி தரிசனம் முடித்துவிட்டு யாத்திரையைத் தொடங்க முருகன் கிளம்பினார். அவரையும் உடன் வந்த ஹெச்.ராஜா, அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோரையும் போலீசார் தடுத்துக் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்