தொற்று தொடர்ந்து குறைவு: சென்னையில் ஒரே ஒரு கட்டுப்பாட்டு பகுதி
தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் சென்னையில் ஒரே ஒரு கட்டுப்பாட்டு பகுதி மட்டும் உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 600-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரே பகுதி அல்லது ஒரே தெருவில் 5 நபர்களுக்கு மேல் தொற்று ஏற்பட்டால் அந்த பகுதிகள் அனைத்தும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையை விட குணமடைவோர் அதிகரித்து வருகின்றனர்.
இதனால் கட்டுப்பாட்டு பகுதியும் குறைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியில் மஞ்சப்பாக்கம் பகுதி மட்டும் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.