கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு மரணம்
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார்.
சென்னை,
தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்து வந்தவர், துரைக்கண்ணு. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.
அமைச்சர் துரைக்கண்ணு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த மாதம் 13-ந்தேதி காரில் சேலம் நோக்கி புறப்பட்டார். அப்போது திடீரென அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் துரைக்கண்ணு மேல் சிகிச்சைக்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சி.டி.ஸ்கேனில் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நுரையீரலில் 50 சதவீதம் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால், செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் நேற்று இரவில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்த மருத்துவமனை முன்பு குவிந்தனர்.