பெரம்பலூரில் உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி உறவினர்கள் துக்கம் விசாரிக்க வந்ததால் பரபரப்பு
பெரம்பலூரில் உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மேட்டுத்தெருவை சேர்ந்த செல்வராஜ்-விஜயலட்சுமி தம்பதியின் மகள் அம்மு என்ற ரோஷ்னி (வயது 23). பி.எஸ்.சி. பி.எட் படித்துள்ள ரோஷ்னிக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள காட்டு கொட்டகை கிராமத்தை சேர்ந்த தனது தாய்மாமா ரெங்கராஜின் மகன் வீரராகவன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
ஓசூரில் தங்கியிருந்து பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வீரராகவன் கடந்த மார்ச் மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே ரோஷ்னி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
திருமணத்தின்போது ரோஷ்னிக்கு அவரது பெற்றோர் வழங்கிய 43 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை திரும்பக்கேட்டும், கணவர் குடும்பத்தினர் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரம்பலூர் நகர் முழுவதும் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம், ரோஷ்னி இறந்து விட்டதாக கூறி அவருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதனை கண்ட ரோஷ்னியின் உறவினர்கள், தோழிகள் துக்கம் விசாரிப்பதற்காக ரோஷ்னியின் வீட்டிற்கே சென்றுள்ளனர்.
அப்போது அங்கு ரோஷ்னி உயிருடன் இருப்பதை கண்டு அவர்கள் திகைத்தனர். மேலும் பலர் ரோஷ்னியின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்துள்ளனர். இந்த விவகாரம் ரோஷ்னி குடும்பத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே இது குறித்து தனது கணவர் குடும்பத்தினர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனிடம், ரோஷ்னி தனது பெற்றோருடன் வந்து நேற்று கண்ணீர் மல்க புகார் கொடுத்தார். பின்னர் இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.