என்ஜினீயரிங் படிப்பு சிறப்பு பிரிவு கலந்தாய்வு: விருப்ப பாடப்பிரிவு, கல்லூரிகளை தேர்வு செய்வதில் மாணவர்கள் ஆர்வம்

என்ஜினீயரிங் படிப்பு சிறப்பு பிரிவு கலந்தாய்வில் விருப்ப பாடப்பிரிவு, கல்லூரிகளை மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு செய்தனர்.

Update: 2020-10-03 23:13 GMT
சென்னை,

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாட்கள் சிறப்பு பிரிவில் உள்ள விளையாட்டு, முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த அட்டவணை ஒதுக்கப்பட்டிருந்தது.

அதனைதொடர்ந்து நேற்று தங்களுடைய விருப்ப பாடப்பிரிவுகள், கல்லூரிகளை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. மாணவர்கள் தங்களுக்கான விருப்ப பாடப்பிரிவுகள், கல்லூரிகளை தேர்வு செய்யும்போது அதிக அளவில் விருப்பங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று மாணவர்கள் தங்களுடைய விருப்பங்களை தேர்வு செய்தனர்.

அதில் விளையாட்டு பிரிவில் 721 மாணவர்கள் 13 ஆயிரத்து 763 விருப்பங்களையும், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள் பிரிவில் 363 மாணவர்கள் 4 ஆயிரத்து 196 விருப்பங்களையும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 74 மாணவர்கள் 1,161 விருப்பங்களையும் ஆன்லைன் மூலம் தேர்வு செய்து இருக்கின்றனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி வரை மாணவ-மாணவிகள் விருப்பங்களை தேர்வு செய்யலாம். இதன் அடிப்படையில் நாளை (திங்கட்கிழமை) தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அது இறுதி செய்யப்படும். அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். சிறப்புப் பிரிவு மாணவர்களை தொடர்ந்து 8-ந்தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்