ரேஷன் கடையில் தேவைக்கு ஏற்ப பாமாயில் வழங்க கூடுதல் ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு

ரேஷன் கடையில் பாமாயிலை தேவைக்கு ஏற்ப வழங்க கூடுதலாக ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update:2020-10-02 05:15 IST
சென்னை,

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய்க்கு ரேஷன் அட்டைதாரர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் அந்தத் திட்டத்தை வரும் நிதியாண்டிலும் நீட்டிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் வெளிச்சந்தையில் உள்ள பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியும் என்றும் அரசுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் கடந்த பிப்ரவரியில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, சிறப்பு பொது வினியோகத் திட்டத்தை 2021-ம் ஆண்டு பிப்ரவரி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார். அந்த கோரிக்கைகளை ஏற்ற அரசு, துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் லென்டில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்கள் மேலும் ஓராண்டுக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு கடந்த பிப்ரவரியில்உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் அரசுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கடிதம் எழுதி, பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் பாமாயிலுக்கும், வெளிச்சந்தையில் விற்கப்படும் பாமாயிலுக்கும் மிகப்பெரிய விலை வித்தியாசம், அதாவது லிட்டருக்கு ரூ.25 என்ற அளவில் வித்தியாசம் உள்ளது.

எனவே ஏறக்குறைய அனைத்து ரேஷன் அட்டைதாரருமே பாமாயிலை ரேஷன் கடைகளில் வாங்க விரும்புகின்றனர். 100 சதவீத பாமாயில் தேவையை வழங்க வேண்டுமானால் மாதமொன்றுக்கு ரூ.47.22 கோடி தொகையை கூடுதலாக அரசு ஒதுக்க நேரிடும்.

மாத கடைசியில் பாமாயில் கேட்டும் அட்டைதாரருக்கு பாமாயில் இல்லை என்று கூறி மறுத்தால், அது மக்கள் மத்தியில் குற்றச்சாட்டாக அமைந்துவிடும். எனவே கொரோனா காலகட்டம் முடியும்வரை 100 சதவீதம் பாமாயிலை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுவினியோக திட்டத்தில் ஒதுக்கப்படும் பாமாயிலின் மாத ஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. அதனடிப்படையில் தற்போது, அனைத்து தகுதியுள்ள ரேஷம் அட்டைதாரருக்கும் இந்த மாதம் அக்டோபர் முதல் வரும் பிப்ரவரி வரை பாமாயில் வழங்கும் வகையில் அதன் தேவையின் அளவை 100 சதவீதமாக உயர்த்த அரசு அனுமதிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்