அரியர் மாணவர்கள் தேர்ச்சி: தமிழக அரசின் முடிவு தவறானது - ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் தகவல்

அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு தவறான முடிவு எடுத்து இருப்பதாக ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார்.

Update: 2020-09-09 22:30 GMT
சென்னை, 

அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு தவறான முடிவு எடுத்து இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் தமிழகத்தில் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை தவிர, மற்ற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களும் தேர்ச்சி பெற்றதாக உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் தமிழகத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் அனில் சஹஸ்ரபுதே கடிதம் எழுதியதாகவும், அதில் அரியர் மாணவர்கள் தேர்ச்சியை ஏற்கமுடியாது என்று தெரிவித்து இருந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அப்படி எந்த கடிதமும் வரவில்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும் இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் அனில் சஹஸ்ரபுதே, அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் குறித்து தற்போது ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனில்சஹஸ்ரபுதேவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழ்நாடு அரசு அரியர் தேர்வுகளை ரத்து செய்திருப்பது தங்களுக்கு தெரியுமா?

பதில்:- அப்படி எடுத்து இருக்கும் முடிவு தவறானது. இதுகுறித்து ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன்.

கேள்வி:- அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இதுதொடர்பாக உங்களுக்கு கடிதம் எழுதி இருந்தாரா?

பதில்:- அவர் கடிதம் எழுதி இருந்தார். அதற்கு நானும் அவருக்கு பதில் அளித்து இருந்தேன்.

இவ்வாறு அதில் அவர் பதிலளித்தார்.

மேலும் இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வரும் வழக்கில் அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்