கோவையில் பரிதாபம்: அடுக்குமாடி வீடு இடிந்து தாய், மகன் உள்பட 4 பேர் பலி
கோவையில் அடுக்குமாடி வீடு இடிந்து தாய், மகன் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கோவை,
கோவை செட்டி வீதி செல்வசிந்தாமணி குளம் அருகே உள்ள கே.சி.தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). பிளக்ஸ் பிரிண்டிங் தொழில் செய்து வருகிறார். அவரது தாயார் வனஜாவுக்கு (60) சொந்தமான 2 மாடி கொண்ட அடுக்குமாடி வீட்டின் முதல் தளத்தில் கண்ணன், மனைவி சுவேதா என்கிற ஷாலினி (24), மகன் தன்வீர் (5) மற்றும் கண்ணனின் தாயார் வனஜா, சகோதரி கவிதா (43) ஆகியோர் வசித்து வந்தனர்.
தரைத்தளத்தில் கண்ணனின் உறவினர்கள் சரோஜா (65), மனோஜ்குமார் (48) ஆகியோர் குடியிருந்தனர். அந்த வீட்டுக்கு அருகில் ஒரு ஓட்டு வீட்டில் கோபால்சாமி (75), அவரது மனைவி கஸ்தூரி (60) மற்றும் மகன் மணிகண்டன் (42) ஆகியோர் வசித்து வந்தனர். கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனஜாவின் அடுக்குமாடி வீடு திடீரென இடிந்தது.
இதில் வனஜா, சுவேதா, தன்வீர், கவிதா, சரோஜா, மனோஜ்குமார் ஆகிய 6 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். மேலும் பக்கவாட்டில் சரிந்த வீடு அருகில் இருந்த ஓட்டு வீடு மீது விழுந்தது. இதனால் அதில் இருந்த கோபால்சாமி, கஸ்தூரி மற்றும் மணிகண்டன் என்று மொத்தம் 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
அப்போது கண்ணன் வீட்டுக்கு முன்பு நின்றிருந்ததால் அவர் இந்த விபத்தில் சிக்கவில்லை. இதை அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நேற்று முன்தினம் இரவே வனஜா, தன்வீர் ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின்னர் கவிதா, சரோஜா, மனோஜ்குமார், மணிகண்டன் ஆகியோர் நேற்று காலை மீட்கப்பட்டனர்.
மீட்பு படையினரின் கடுமையான போராட்டத்துக்கு பின்னர் கண்ணனின் மனைவி சுவேதா மற்றும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோபால்சாமி ஆகியோர் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டனர். எஞ்சியிருந்த கஸ்தூரி நேற்று மாலை 5 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கிடையே கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் நேற்று இரவில் பரிதாபமாக இறந்தார். இதனால் வீடு இடிந்து பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.