கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 3.78 லட்சம் பேருக்கு வீட்டுத்தனிமை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக் சென்னையில் 3.78 லட்சம் பேருக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை,
கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த பணியை மாநகராட்சி களப்பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
அந்தவகையில் இதுவரை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 949 பேரும், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் 2 லட்சத்து 54 ஆயிரத்து 593 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கொரோனா பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருந்தவர்கள் 2 லட்சத்து 5 ஆயிரத்து 897 பேரும், வெளிநாடு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னை வந்தவர்கள் என 88 ஆயிரத்து 531 பேரும், காய்ச்சல் முகாம் மூலம் அறிகுறி கண்டறியப்பட்ட 50 ஆயிரத்து 145 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அந்த வகையில் சென்னையில் இதுவரை 8 லட்சத்து 46 ஆயிரத்து 115 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 430 பேருக்கு 14 நாள் தனிமை முடிந்து உள்ளது. 3 லட்சத்து 78 ஆயிரத்து 685 பேருக்கு வீட்டு தனிமை இன்னும் முடிவடையவில்லை.
மேற்கண்ட தகவல் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.