‘டாஸ்மாக்’ கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை வழக்கு: நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
‘டாஸ்மாக்’ கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை வழக்கு தொடர்பாக நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், சேலம் மாவட்டம் ஜாரி கொண்ட லாம்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் குல்லு படையாச்சி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ கடை களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை ஊழியர்கள் விற்பனை செய்கின்றனர். எனவே, அதிக விலைக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். மதுபானங்களின் விலைப்பட்டியலை கடைக்கு முன்பு ஒட்ட ‘டாஸ்மாக்’ நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கிற்கு ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘உயர்த்தப்பட்ட விலை பட்டியல் ‘டாஸ்மாக்’ மதுபானக் கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு மது விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அவ்வப்போது பறக்கும் படை அதிகாரிகள் கடைகளுக்கு சென்று அதிரடி ஆய்வுகள் நடத்துகின்றனர்’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யவில்லை என்பதை ‘டாஸ்மாக்’ நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.