ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2020-07-06 23:45 GMT
சென்னை,

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

எனவே ஊரடங்கில் சில தளர்வுகளை அவ்வப்போது அரசு அளிப்பதோடு, ரேஷன் பொருட்களை இலவசமாக மக்களுக்கு வழங்கி வருகிறது.

அதன்படி இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்டு முதல் நவம்பர் மாதம் வரை 4 மாதங்களுக்கு விலையின்றி கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்று காரணமாக இம்மாதம் 31-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டதை போலவே, இம்மாதமும் (ஜூலை) ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையின்றி துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு முன்பு, அதாவது 1-ந் தேதியில் இருந்து 3-ந் தேதிவரை ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களான துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை ரேஷன் கடைகளில் அதற்கான விலை கொடுத்து பெற்றுள்ளனர். அப்படி பெற்றுக்கொண்டுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அந்த தொகை, எதிர்வரும் ஆகஸ்டு மாதத்தில் வழங்கப்படும் துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலையில் ஈடுசெய்து கொள்ளப்படும்.

இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு செல்பேசியில் இதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

மேலும், இதற்குரிய பதிவுகள் விற்பனை முனைய எந்திரத்தில் மேற்கொள்ளப்படும். இந்த ரேஷன் அட்டைதாரர்கள், தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை ரேஷன் கடைகளில் மீண்டும் சென்று இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், நவம்பர் மாதம் வரை அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குவதை கருத்தில்கொண்டு, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர் மாதம் வரை விலையின்றி அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்