கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல 200 வாகனங்கள் - மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் புதிய தகவல்

சென்னையில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாமை 680 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனா நோயாளிகளை சிகிச்சை மையத்துக்கு அழைத்து 200 தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

Update: 2020-07-04 22:30 GMT
சென்னை,

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கான தாமதம் ஏன்? அந்த முடிவுகள் வந்த பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்?

பதில்:- இந்தியாவிலேயே அதிக பரிசோதனை சென்னையில் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் பொதுமக்களுக்கு எடுக்கப்படும் மாதிரிகள் அனைத்தும் பரிசோதனை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அதன் பரிசோதனை முடிய 4 முதல் 6 மணி நேரம் ஆகிறது. இவ்வாறு பரிசோதனை முடிவுகள் வந்ததும், அதில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் தகவல் அனைத்து பிரத்யேக மாநகராட்சி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அது அந்தந்த வார்டில் உள்ள மாநகராட்சி சுகாதார அதிகாரிக்கு அனுப்பப்படும்.

அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மாநகராட்சி மருத்துவ சோதனை மையத்துக்கு கொண்டு செல்லப்படுவார்கள். மருத்துவ சோதனை மையத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை பிரித்து அனுப்பும் திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 11 மருத்துவ சோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. கூடுதலாக கோடம்பாக்கம் மண்டலம், புலியூர் மாநகராட்சி பள்ளியிலும், மணலி மண்டலத்தில் தலா ஒரு மருத்துவ சோதனை மையம் உள்ளிட்ட 4 சோதனை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சோதனை மையங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஸ்கேன், எக்ஸ்ரே சோதனைகள் செய்யப்பட்டு, அங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனைபடி மருத்துவமனைக்கோ, கொரோனா சிகிச்சை மையத்துக்கோ அல்லது வீட்டு கண்காணிப்பிலோ, மாநகராட்சி வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுவர்.

கேள்வி:- பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை மையத்தில் இருந்து கொண்டு செல்வதற்கு தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வருகிறதே?

பதில்:- இதுபோன்ற புகார்கள் ஒரு சில இடங்களில் வந்தது. இவ்வாறு தாமதம் ஏற்படாமல் இருக்க கொரோனா நோயாளிகளை வீட்டில் இருந்து மாநகராட்சி சோதனை மையத்துக்கு கொண்டு செல்ல 10 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் வகையில் வாகனம் வார்டுக்கு ஒன்று (200 வார்டுக்கு-200 வாகனங்கள்) என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.

கேள்வி:- பெருநகர சென்னை மாநகராட்சியின் கொரோனா இறப்பு எண்ணிக்கைக்கும், சுகாதாரத்துறையின் கொரோனா இறப்பு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தது. தற்போது சரி செய்யப்பட்டு விட்டதா?

பதில்:- இதற்காக பொது சுகாதார இயக்குனர் டாக்டர் வடிவேலு தலைமையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தங்களது ஆய்வுகளின் முடிவுகளை இன்னும் தரவில்லை. அந்த குழுவின் முடிவுகளில் தான் அது தெரியவரும். பாதுகாப்புடன் கொண்டு வரும் இறந்தவர்கள் உடல்களையும் கொரோனா உயிரிழப்பு என மயான பூமி ஊழியர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். இதனால் தான் இந்த புள்ளிவிவரங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு மருத்துவ ரீதியான காரணங்கள் குறித்து ஆராய்ந்து, உயிரிழப்புக்கான காரணத்தை மருத்துவ குழு தான் முடிவு செய்யவேண்டும்.

கேள்வி:- கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநகராட்சி சார்பில் சிகிச்சை மையங்கள் எத்தணை அமைக்கப்பட்டுள்ளது?

பதில்:- இதுவரை 52 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 17 ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 31 மையங்கள் மட்டுமே செயல்படுகிறது. இதில் 5 ஆயிரத்து 662 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேள்வி:- தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்களின் செல்போனில் பிரத்யேக செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது. சோதனை செய்யப்போகும் பணியாளர் அதில் பதிவு செய்யவேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட காய்கறி உள்ளிட பொருட்களின் விவரங்களும் அதில் பதிய வேண்டும். அந்த தகவல்கள் அனைத்து பதிவு செய்யப்படும். இது தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும்.

கேள்வி:- சென்னையில் முழு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. முழு ஊரடங்கின் முடிந்த பிறகு மாநகராட்சி சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

பதில்:- சென்னையில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இதுவரை நாள் ஒன்றுக்கு 560 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதை 680 ஆக அதிகரிப்பது எங்களது லட்சியம். முழு ஊரடங்கு காலத்திலேயே இந்த மருத்துவ முகாம்களில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சோதனை செய்கின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டால் 70 ஆயிரம் பேர் வரை வருவார்கள். முழு ஊரடங்கு முடிவடைந்தாலும் மாநகராட்சி இன்னும் தீவிரமாக செயல்படும்.

கேள்வி:- சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு இதுவரை எவ்வளவு செலவு ஆகி உள்ளது?

பதில்:- கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு செல்லும் பணியாளர்களுக்கும் காலை மற்றும் மதியம் உணவுகள் வழங்கப்படுகிறது. இதற்கே ரூ.35 கோடி செலவாகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் காலாண்டில் போதிய வருமானம் இல்லை. மாநில பேரிடர் மீட்பு நிதியில் இருந்து தான் பெறப்படுகிறது. இதுவரை ரூ.300 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,000 ஆகிறது. மேலும் அங்கு பணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள், டாக்டர்கள், போலீசாருக்கும் தேவையான உணவு வழங்கப்படுகிறது.

கேள்வி:- இதுவரை மாநகராட்சி ஊழியர்கள் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணம் அடைந்து பணிக்கு திரும்பியவர்கள் எத்தனை பேர்?

பதில்:- கொரோனா தடுப்பு பணியில் அனைத்து நிலையிலும் ஈடுபட்டிருந்த 400 ஊழியர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 110 குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்