ரெயில்களை தனியார் இயக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தி.மு.க. சார்பில் பிரதமருக்கு கடிதம்

ரெயில்களை தனியார் இயக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

Update: 2020-07-03 18:52 GMT
சென்னை,

ரெயில்வே துறையில் தனியார் மூலம் ரெயில்களை இயக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

இந்தியாவில் 109 வழித்தடங்களில் 151 பயணிகள் ரெயில்களை தனியார் மூலம் இயக்கும் திட்டத்தை அறிவித்து இருப்பது மத்திய அரசின் முந்தைய நிலைப்பாட்டுக்கு எதிரானது ஆகும். தனியார் மூலம் ரெயில்களை இயக்குவது என்பது ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிரானது ஆகும்.

தனியார் மூலம் ரெயில்களை இயக்கும்போது லாப நோக்கம் மட்டுமே முக்கியமானதாக இருக்கும். இது, சாதாரண மக்களிடம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரெயில்வே துறையில் 4½ லட்சம் பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது வேலைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். ரெயில்வே துறையை பொறுத்தமட்டில் தேசிய அளவில் அனைத்து நகரங்களையும் இணைத்து லாப நோக்கம் அல்லாமல் செயல்பட்டு வருகிறது.

தனியார் ரெயில்கள் மூலம் ரெயில்கள் இயக்கப்படும்போது இது சாத்தியம் இல்லாமல் போய்விடும். தனியார் ரெயில்களை இயக்கும் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி லாப நோக்கில் செயல்படும்போது ரெயில்வே துறையும் கட்டணத்தை உயர்த்தி அதை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும். அதுபோன்ற சூழ்நிலையில் குறைவான வருவாய் உள்ளவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட ரெயில்வே துறையின் நோக்கமும் பாழ்பட்டு விடும். எனவே, தனியார் மூலம் ரெயில்களை இயக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்