சதுரகிரி வனப்பகுதியில் புகுந்து அரிய மூலிகை செடிகளை வெட்டி ‘டிக்-டாக்’கில் வெளியிட்ட 2 பேர் கைது

சதுரகிரி வனப்பகுதியில் புகுந்து அரிய மூலிகை செடிகளை வெட்டி டிக்-டாக்கில் வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-07 21:30 GMT
பேரையூர்,

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் சதுரகிரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. அரிய வகை ஏராளமான மூலிகைகளும் அங்குள்ளன. மதுரை மாவட்டம் மள்ளப்புரம் முதல் விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை வரை இந்த பகுதி உள்ளது.

இந்த வனப்பகுதிக்குள் விருதுநகர் மாவட்டம் தைலாபுரத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 52), பேரையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மூலையன் (55) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அத்துமீறி புகுந்து அங்கு அரியவகை மூலிகை செடிகளை வெட்டி அதில் இருந்து வரும் திரவத்தை குடித்தனர்.

இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். சமூக வலைத்தளத்தில் இதனைக்கண்ட நெல்லை வன மண்டல தலைமை வனபாதுகாவலர் தின்கர்குமாரா, விருதுநகர் மாவட்ட வன அதிகாரி முகமது சபாப்பிற்கு தகவல் கூறினார். அவரும் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க சாப்டூர் வனத்துறை அதிகாரி சீனிவாசனுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி, வனப்பகுதிக்குள் புகுந்த 2 பேரையும் கண்டுபிடித்து கைது செய்து சாப்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். 2 பேரும் மூலிகை செடிகளை வெட்டி அதை வீடியோ எடுத்து டிக்-டாக் செயலியில் பதிவிட்டதை ஒப்புக்கொண்டனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அத்துமீறி சென்றதற்கும், அரியவகை மூலிகைகளை சேதப்படுத்தியதற்கும், அவற்றை வீடியோ எடுத்து டிக்-டாக் மூலம் பரப்பியதற்கும் என 2 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் “இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம்” என்று கூறச்சொல்லி அவர்களை தோப்புக்கரணமும் போட வைத்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்