சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க அனுமதி

சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.;

Update:2020-05-24 09:24 IST
சென்னை,

நாடு முழுவதும் தமிழகம் உள்பட கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.  இதனால், ரெயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு ஸ்தலங்கள் மற்றும் கேளிக்கை பூங்கா உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு விசயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.  கடந்த 4ந்தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் வெளியாகின.  தொடர்ந்து 18ந்தேதி முதல் ஊரடங்கில் கூடுதலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, சென்னை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற மாவட்டங்களில் பிட்டர், பிளம்பர், தச்சர் உள்ளிட்ட தனிநபர் பணியாளர்கள், விதிமுறைகளுடன் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது.

சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.  இந்நிலையில், சென்னையில் தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதுபற்றிய பரிசீலனையில், சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் செய்திகள்