சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு 8,795 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-05-21 13:32 GMT
சென்னை,

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் மற்றும் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கூறும்பொழுது, தமிழகத்தில் 41 அரசு மற்றும் 25 தனியார் மருத்துவ ஆய்வகங்கள் உள்ளன.  இதனால் கொரோனா பாதிப்புகளை பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வக எண்ணிக்கை 63ல் இருந்து 66 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் மொத்தம் 3 லட்சத்து 72 ஆயிரத்து 532 பேருக்கு இதுவரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.  நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுடன் ஒப்பிடுகையில் இது மிக அதிகம்.

இன்று ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர்.  இவர்களில் 3 பேர் அரசு மருத்துவமனையிலும், 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்து உள்ளனர்.  சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,228ல் இருந்து 8,795 ஆக உயர்ந்து உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்