12 ஆயிரத்து 536 பேருக்கு பரிசோதனை: மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு - அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் சராசரியாக 12 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது எனவும், மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 46 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் உள்பட நேற்று 536 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று 364 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக மருத்துவமனையில் நேற்று நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்து 270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று 11 ஆயிரத்து 121 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 37 ஆயிரத்து 841 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 234 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 406 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் குறைவான அளவில் பரிசோதனைகள் செய்யப்படுவதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அது முற்றிலும் தவறு. கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளுக்கு நாள் மாறுபடும்.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் 85 ஆயிரம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 39 அரசு மற்றும் 22 தனியார் என மொத்தம் 61 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் சராசரியாக 12 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே 2-வது இடமாக தமிழகத்தில் கொரோனா பரிசோதனை பிப்ரவரி 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.