தமிழகத்தில் மே 31வரை 12 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இன்றி கட்டுப்பாடுகள் தொடரும்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இன்றி கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.;
சென்னை,
நாடு முழுவதும் 3ஆவது முறையாக கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இது இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் 4ஆவது முறையாக புதிய விதிகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அதற்கான விதிமுறைகள் 18-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதில், 12 மாவட்டங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் தளர்வுகள் ஏதும் இல்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.மதுரை உள்ளிட்ட ஏனைய 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அளிக்கப்படுகின்றன.
* பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை நீடிப்பு.
* வழிபாட்டு தளங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிப்பு.
* திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எந்த தளர்வும் இல்லை.
* நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
* தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
* பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.
* பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்.
* நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை. சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர பிற இடங்களில் அனுமதிக்கப்பட்ட பணி தொடரும்.
* சமய சமுதாய அரசியல், கல்வி, கலாச்சார விழாக்கள் நடைபெறாது.
*விமானம், ரெயில், பேருந்து இயங்காது - மாநிலங்கள் இடையே மற்றும் சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு ரெயில் போக்குவரத்து இல்லை.
*ஆட்டோ, டாக்சி, மெட்ரோ- மின்சார ரெயில் போக்குவரத்து இல்லை.
*அனுமதிக்கப்பட்ட, அத்தியாவசிய பணிகளுக்கும் மட்டுமே போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.