மதுக்கடை ஒன்றுக்கு தினமும் 500 பேருக்கு மட்டுமே ‘டோக்கன்’ வழங்க திட்டம் - ஐகோர்ட்டில், டாஸ்மாக் நிறுவனம் விளக்கம்
கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு கடைக்கு தினமும் 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி மது விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்து விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்றும் ஆன்-லைன் மூலம் மது விற்பனை செய்யலாம் என்றும் கடந்த 8-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டில், டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனர் கிர்லோஷ் குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அனைத்து மாநில ஐகோர்ட்டுகளுக்கும் பொருந்தும். எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்யவேண்டும். மேலும், மத்திய அரசு கடந்த 1-ந்தேதி பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலங்களில் மதுபான கடைகளை திறக்கலாம் என்று கூறியது.
இதன்படி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதே போல் சென்னை போலீஸ் கமிஷனர் அதிகார வரம்புக்கு உள்பட்ட பகுதியை தவிர, தமிழகத்தில் பிற பகுதிகளில் மதுக்கடைகள் கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை (6 மணி நேரம்) திறக்கப்பட்டன.
இந்த மது விற்பனைக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஐகோர்ட்டு கடந்த 6-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் விதித்த நிபந்தனைகளையும் தீவிரமாக பின்பற்றப்பட்டன. ஆனாலும் நிபந்தனைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. பல மாநிலங்களில் 41 நாட்களுக்கு பின்னர் மதுவிற்பனை சிறப்பாக நடந்துள்ளது. கூட்டம் அத்துமீறும் கடைகளை அம்மாநில போலீசார் மூடிவிட்டனர். அதுபோல, தமிழகத்திலும் கட்டுக்கடங்காத கூட்டம் முண்டிய அடித்தபோது, 12 மதுபானக்கடைகள் மூடப்பட்டு விட்டன.
எனவே, மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டோக்கன் முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது, 6 மணி நேரம் திறந்து இருக்கும் ஒரு மதுக்கடையில், ஒரு மணி நேரத்துக்கு சுமார் 70 பேர் வீதம் மது வாங்கிச்செல்லும் விதமாக, கடை ஒன்றுக்கு தினமும் 500 பேருக்கு 500 டோக்கன் வழங்கி, கூட்ட நெரிசலை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு மேல் யாராவது டோக்கன் வைத்திருந்தால், அவர்கள் மறுநாள் மது வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே, டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்கவேண்டும். டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.