வெளிமாநிலங்கள், அந்தமானில் உள்ள 308 தமிழக மீனவர்களை கப்பல் மூலம் அழைத்து வர நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
வெளிமாநிலங்கள், அந்தமானில் உள்ள 308 தமிழக மீனவர்களை கப்பல் மூலம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களை தாயகம் கொண்டு வருவதற்கு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஈரான் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 700-க்கும் அதிகமான மீனவர்கள் உள்ள நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக தமிழகம் அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தமிழக அரசு கடிதங்கள் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஆவன செய்யுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரியை, தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
இதன் காரணமாக தமிழக மீனவர்களுக்கு தேவையான உணவு, உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வருவதற்கு மத்திய-மாநில அரசு துரித நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
மேலும், கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக இதர மாநிலங்களில் தங்கியுள்ள தமிழக மீனவர்களை தமிழகத்திற்கு உடனடியாக அழைத்து வர இயலாத நிலையில், அந்த மீனவர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே உணவு, உடை, தங்குமிடம் மற்றும் அனைத்து அத்தியாவசிய தேவைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலம் செய்து கொடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கோவா மாநிலத்தில் உள்ள மாலிம் துறைமுகத்தில் மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 மீனவர்களுக்கு அனைத்து அத்தியாவசிய தேவைகளை கோவா மாநில அரசு மூலம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் துரித நடவடிக்கையால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 684 மீனவர்கள், கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து கடந்த மார்ச் 27-ந்தேதி சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பின் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 2-ம் கட்டமாக 56 மீனவர்கள் அங்கிருந்து கடந்த 11-ந்தேதி அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
கர்நாடக மாநிலம் மால்பே, கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்த 118 மீனவர்களை தமிழகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தமான் யூனியன் பிரேதசத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 190 தமிழக மீனவர்களை கப்பல் மூலம் விரைவில் தமிழகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அந்தமான் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த பின்னர் மீனவர்களை உடனடியாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.