கொரோனா பாதிப்பை முன்னிட்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி - தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா பாதிப்பை முன்னிட்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா ஏற்படுத்திய பாதிப்பை முன்னிட்டு அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கொரோனா கடனுதவித் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் 30-ந் தேதிவரை அமலில் இருக்கும்.
மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களால் கடன் வழங்கப்படும். இங்கு ஏற்கனவே இரண்டு முறை கடன் பெற்றுள்ள சுய உதவிக் குழுக்களுக்களே இந்த கடன் பெற தகுதியுள்ள குழுக்களாகும்.
உறுப்பினர் ஒருவருக்கு குறைந்தது ரூ.5 ஆயிரமும், அதிகபட்சமாக ஒரு குழுவிற்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். ஏற்கனவே பெற்றுள்ள கடன் நிலுவைத் தொகை மற்றும் தற்போது பெறப்படும் கடன் தொகையைச் சேர்த்து கடன் தொகையின் அளவு ரூ.10 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். நடைமுறையில் இருக் கும் வட்டி விகிதம் இந்தக் கடனுக்கும் பொருந்தும்.
கடனை 24 மாதங்கள் முதல் 36 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும். முதல் 6 மாதங்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த தேவையில்லை. பின்னர் கடனை வட்டியுடன் சமதவணையில் வசூலிக்கப்படும்.
கோவிட்-19 கீழ் சிறப்பு கடன் பெறுதல் என்று குழு தீர்மானிக்க வேண்டும். முன்வைப்புத் தொகை, காப்புத் தொகை, சேவைக் கட்டணம், நடைமுறைக் கட்டணம் போன்றவை வசூலிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.