ஊரடங்கு மேலும் தளர்வு: தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் திறப்பு - இயல்புநிலை திரும்புகிறது

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டதையடுத்து பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இயல்புநிலை திரும்ப தொடங்கி உள்ளது.

Update: 2020-05-11 22:00 GMT
சென்னை, 

கொரோனா பரவலை தடுக் கும் நடவடிக்கையாக நாடு முழு வதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 17-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. கொரோனா மிரட்டலுக்கு இடையே தமிழகத்தில் கடந்த 4-ந்தேதி முதல் ஊரடங்கு மெல்ல, மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி காய்கறி, மளிகை கடைகள் திறப்பு நேரம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த 4-ந்தேதி முதல் தனித்தனி கடைகள் திறக்கவும், வீட்டு உபயோக விற்பனை கடைகளை 6-ந்தேதி முதல் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு பச்சை சிக்னல் காட்டினாலும், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் சிவப்பு சிக்னல் காட்டியதால் கடைகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பதில் வணிகர்கள், வியாபாரிகள் குழப்பம் அடைந்தனர்.

இந்தநிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை நேற்று மேலும் தளர்த்தியது. மேலும், வணிகர்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை தவிர்க்கும் எந்தெந்த கடைகள் இயங்கலாம் என்ற தெளிவான அறிவிப்பையும் அரசு வெளியிட்டது.

கட்டுமான பொருட்கள், சிமென்ட், டைல்ஸ், பெயிண்ட், எலக்ட்ரிகல் ஹார்டுவேர், சானிடரிவேர், ஆட்டோ மொபைல் உதரிபாகங்கள், மின்சாதன பொருட்கள், செல்போன், வீட்டு உபயோக எந்திரங்கள் மற்றும் பொருட்கள், மோட்டார் எந்திரங்கள், கண் கண்ணாடி ஆகிய கடைகள் மற்றும் அவைகள் பழுது நீக்கும் கடைகள், குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்கும் சிறிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பெட்டிக்கடைகள், பர்னிச்சர் கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், துணி சலவை கடைகள், கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீஸ், ஜெராக்ஸ் கடைகள், 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் அவைகள் பழுது நீக்கும் மெக்கானிக் கடைகள், நாட்டு விற்பனை மருந்து கடைகள், விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து, மரக்கடைகள், பிளைவுட் கடைகள், மரம் அறுக்கும் கடைகளை நேற்று முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அரசின் வெளிப்படையான அனுமதியை தொடர்ந்து 48 நாட்களுக்கு பின்னர் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு திறந்ததால் கடைகள் தூசி படித்து காணப்பட்டன. எனவே வியாபாரிகள் கடையை திறந்து முதலில் நன்கு சுத்தப்படுத்தினர். பின்னர் வியாபாரம் நன்றாக இருக்க வேண்டும் என்று பூஜை போட்டனர். கடைகளில் ஏ.சி. போடக் கூடாது என்ற கண்டிப்பான மாநகராட்சி நிர்வாகங்களின் உத்தரவை வணிகர்கள் கடைப்பிடித்தனர். ஏ.சி. இயக்கப்படவில்லை என்று கடைகள் முன்பு சில வணிகர்கள் நோட்டீஸ் ஒட்டிவைத்து இருந்தனர்.

கடைகள் திறக்கப்பட்டாலும் வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் கூட்டம் காணப்படவில்லை.

சாமானியர்கள் அதிகம் கூடும் டீக்கடைகள் திறப்பதற்கும் நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பார்சலில் மட்டும் டீ வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. எனவே டீக்கடைகளில் பார்சல் டீ மட்டும் வழங்கப்பட்டன.

சாலையோர தள்ளுவண்டிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து சென்னை இயல்புநிலை திரும்புவதற்கு பிள்ளையார் சுழி போன்று அமைந்து உள்ளது.

மற்ற கடைகளை திறப்பதற்கான தடை நீங்கினாலும், சலூன் கடை மற்றும் பியூட்டி பார்லர் திறப்பதற்கு மட்டும் தடை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்